articles

img

பெருந்தொற்றிலும் தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்....

இந்தியா முழுவதிலும் கொரோனா என்னும் பெருந்தொற்று மிகவேகமாக பரவி வருகிறது. தலைநகர் தில்லியில் இந்த கொரரோனாவின் தாக்கம்சற்று அதிக அளவிலேயே உள்ளது. இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. தில்லி மாநில அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கடந்த 2020 நவம்பர் 27 முதல் 161 நாட்களாக (06.05.2021) தலைநகர் தில்லியில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவிவசாயிகள், மத்திய பாஜக  அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி சிங்கு, திக்ரி, காஸிபூர், ஷாஜகான்பூர் எல்லைகளில் கூடாரங்கள் அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து  போராட்டம் இக்காலத்திலும் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசின் நெருக்கடி
மத்திய பாஜக அரசுடன் பல கட்டங்களாக விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று விவசாய சங்கங்கள்தெரிவித்துள்ளன. ஆனால் பிரதமர் மோடி அரசு பேச்சுவார்த்தைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லியின் முக்கிய எல்லைப் பகுதிகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. வாகனங்கள வேறு வழியாக திருப்பிவிடப்படுகின்றன.கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு பலவித கெடுபிடிகளை செய்து வருகிறது. இதுவரை போராட்டத்தில் 375க்கும் அதிகமான விவசாயிகள் இறந்து போன போதிலும் மனம் தளராமல் போராட்டத்தை தொடர்கின்றனர். கொரோனாவைவிட மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் ஆபத்தானவை. ஆனால்பாஜக அரசோ போராடும் விவசாயிகளை கொரோனாவை விட ஆபத்தாகப் பார்க்கிறது.விவசாயிகள் போராடி வரும் இடத்திற்கு அருகாமையில் உள்ள மக்களில் சிலரை விவசாயிகளுக்கு எதிராக தூண்டிவிட்டது அரசாங்கம். ஆனால் தங்கள் அன்பால், அகிம்சையால் அவற்றை விவசாயிகள் எதிர்கொண்டனர். கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று சிங்கு எல்லையில் விவசாயிகளின் கூடாரங்கள் சமூகவிரோதிகளால் தீ வைத்து கொளுத்தப்பட் டன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும்ஏற்படவில்லை. விவசாயிகளின் போராட்டங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதஅரசு பல்வேறு நெருக்கடிகளை விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக செயல்படுத்தி வருகிறது.

பொய்ப் பிரச்சாரம்
விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பொருட்டு பலவகையான பொய்ச் செய்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் தர்ணா போராட்டத்தை வலுக்கட்டாயமாக மாற்றுவது என்பதும் இதில் அடங்கும்.தில்லியின் எல்லைகளிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் போராடும் விவசாயிகள் முறையான பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் மறுக்கவில்லை. கொரோனா காலத்தில் பாஜகசில தேர்தல் பிரச்சார பேரணிகளை நடத்தியது. அதனால் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவும் என்பதை ஏற்க மறுக்கிறது. அதே சமயம் பாஜவுக்கு எதிராக ஏதேனும் போராட்டங்கள் நடைபெற்றால் மோடி அரசு அதை மிகவும் கடுமையாகக் கையாள்கிறது.

ஆதரவு நடவடிக்கைகள்
நாடு முழுவதும் உள்ள அறிவுஜீவிகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோருக்கு, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.“மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு நெருக்கடியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும். மேலும் கடந்த 140 நாட்களுக்கும் மேலாக தில்லியின் புறநகரில் திறந்த வெளியில் முகாமிட்டுள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய லட்சக்கணக்கான விவசாயிகளுக்குமத்திய அரசின் பிடிவாதமான அணுகுமுறை உளவியல் மற்றும் உடல்ரீதியான துன்பங்களை ஏற்படுத்தி வருகிறது. பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஏற்கனவே 300க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். பல நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து நடந்து கொண்டி ருக்கும் போராட்டத்தில் காயங்கள் மற்றும் தடுப்புக்காவல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான குளிர் காலத்தில் தில்லி எல்லைகளில் தற்காலிக தங்குமிடங்களில் முகாமிடுதல் மற்றும் கோடையின் வெப்பத்தை தாங்குவது எளிதானது அல்ல. 

இந்த போராட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் பெண்கள் மற்றும் இளைஞர்களின் நீண்டகால பொறுமை மற்றும் துன்பத்தை இது பிரதிபலிக்கிறது” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. “தேசத்திற்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும் விவசாயிகளுக்கு நியாயமாக இருக்க வேண்டும்” என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். “முட்டுக்கட்டைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உடனடியாக விவசாயிகளின் தலைவர்களை அழைத்து ஒரு இணக்கமான தீர்வைக்காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி யுள்ளனர்.

இதேபோல் மேகலாயா ஆளுனர் சத்தியபால் மாலிக், ஏப்ரல் 23 தேதியிட்ட கடிதத்தில்வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தினார். முன்னதாக விவசாயிகளின் போராட்டத்தை கையாள்வதில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தவறான பாதையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அவர்களிடமே தெரிவிக்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். தில்லியில் போராடும்விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக் கான ஆசிரியர்கள் திக்ரி எல்லைக்கு வந்துள்ளனர்.

பாதுகாப்பு 
போராடும் விவசாயிகளுக்கு சமூக நல அமைப்புகள் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் சுத்திகரிப்பான், முகக்கவசம் விநியோகித்தில் மற்றும் தடுப்பூசி போட ஊக்குவித்தல் ஆகியவை போராட்ட களங்களில் செய்து வரப்படுகிறது. திக்ரி எல்லையில் டாக்டர் சவாய்மான்சிங் தலைமையிலான குழு விவசாயிகளை அணுகி கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறது. திக்ரி, சிங்கூர் போராட்ட எல்லையில் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.  போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் முதல் டோஸ் தடுப்பூசி பெரும்பாலும்போட்டுவிட்டனர். இரண்டாம் டோஸ் தடுப்பூசிகிடைப்பதில் சிரமம் உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். சிங்கு எல்லையில் கஜாரியா டைல்ஸ் அலுவலகத்தில் முககவசங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. போராட்டக் களத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் சாலைகளின் ஒரு பக்கப்பாதையை திறந்து விட்டுள்ளனர். ஆனால் தில்லி காவல்துறையின் தடுப்புகள் சாலையின் மறுபக்கத்தில் இன்னும் அகற்றப்படவில்லை. ஆக்ஸிஜன், ஆம்புலன்ஸ் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் சீராக இயங்குவதற்காக சாலை திறக்கப்பட வேண்டும் என்று சம்யுக்தா கிசான்மோர்ச்சா மின்னஞ்சல் மூலம் முறையான கோரிக்கையை அரசுக்கு விடுத்துள்ளது.இதனிடையே, அசாம் மாநிலத்தில் விவசாயிகள் சங்க தலைவர் அகில் கோகோய், நடந்து முடிந்த தேர்தலில் ஷிப்சாகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்திட வேண்டும் என்றுசம்யுக்தா கிஷான் மோர்ச்சா வலியுறுத்தி யுள்ளது.

தொடரும் மத்திய அரசின் மிரட்டல்
கொரோனா பரவல் அச்சுறுத்தலை வைத்துமத்திய பாஜக அரசு தில்லியில் போராடும்விவசாயிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளையும், மிரட்டல்களையும் விடுத்து வருகிறது. வீட்டிற்கு செல்லுங்கள்; இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு மிரட்டி வருகிறது. ஆனால் விவசாயிகளோ கொரோனா என்னும் கொடியகிருமியை விட கொடூரமான கிருமியாக மூன்றுவேளாண் சட்டங்கள் உள்ளது; நாங்கள் வீட்டிற்கு சென்றாலும் மூன்று வேளாண் சட்ட
ங்கள் என்னும் கிருமி தாக்கி இறக்கநேரிடும்; 

நாங்கள் கொரோனா என்னும் கிருமியை சமாளித்து விடுவோம். ஆனால் எங்களால் மூன்று வேளாண் சட்டங்கள் என்னும் கிருமியைசாமாளிக்க முடியாது. எனவே மூன்று சட்டங்களையும் திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்; தில்லி எல்லையில் எங்கள் போராட்டம் தொடரும்; சட்டங்களை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று வீரம் செறிந்த போராட்டத்தை விவசாயிகள் இப்போதும் நடத்தி வருகிறார்கள்.இந்த கொரோனா தொற்று காலத்திலும் போராடி வரும் விவசாயிகளுடன் நாமும் இருப்போம்.

கட்டுரையாளர்  : கே.பி.பெருமாள், மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

;